×

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு; சென்னையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: மேலும் ஒரு கட்டிட தொழிலாளிக்கு சிகிச்சை

சென்னை: கோடை வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளி சென்னையில் உயிரிழந்தார். மேலும் ஒரு கட்டிட தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கோடையின் உக்கிரமான கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சச்சின் (25), காஞ்சிபுரம் அருகே கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக நேற்று அதிகாலை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் சச்சின் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதே போல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வேலு, பூந்தமல்லியில் கடந்த 1ம் தேதி கட்டிடப் பணி செய்து கொண்டிருந்தபோது கடும் வெயில் காரணமாக திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் வேலு ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் தற்போது உடல்நலம் படிப்படியாக தேறி வருகிறார்.

The post ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு; சென்னையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: மேலும் ஒரு கட்டிட தொழிலாளிக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : North ,State ,Chennai ,Tamil Nadu ,Kathri ,North State ,
× RELATED வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது...